Header Ads

Header ADS

தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு; சென்னையை சேர்ந்தவரை தாக்கியது


சென்னை, டிச.16-

‛‛நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது’’ என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

தமிழகத்தில் ஒருவர் பாதிப்பு

தென்ஆப்பிரிக்காவில் தொடங்கிய ஒமிக்ரான் வைரஸ் பரவல் படிப்படியாக பிற நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் முதன் முதலாக கர்நாடக தலைநகர் பெங்களூருவில் டிச.,2ல் 2 பேர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டனர். அதன்பின் மராட்டியம், ஆந்திரா, கேரளா, தெலுங்கானா மேற்கு வங்காளத்தை தொடர்ந்து தமிழகத்திலும் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது வரை 10 மாநிலங்களில் மொத்தம் 69 பேர் இந்த புதிய ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுபற்றி சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

நைஜீரியாவில் இருந்து வந்தவர்

நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருடன் தொடர்பில் இருந்த மேலும் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் புதிய வகை கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. இவர்களின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட நபர் லேசான அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இருதடுப்பூசி செலுத்தி இருந்தாலும் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். இவருடன் விமானத்தில் வந்தவர்களை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வந்த 41 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.மக்கள் பதற்றம் அடையாமல் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

யார் இந்த நபர்

தமிழகத்தில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட நபர் 47 வயது ஆண் ஆவார். சென்னையை சேர்ந்த இவர் நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக டிசம்பர் 10ல் தமிழகம் வந்தார்.

இவரது குடும்பத்தில் உள்ள 5 பேர் மற்றும் ஒன்றாக பயணித்த ஒருவர் என 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் தாக்கியதா என்பதை அறிய மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்...

ஒமிக்ரான் வைரஸால் இந்தியாவில் கொரோனா 3ம் அலை; சி.ஐ.எஸ்.ஆர்., புதுக்குண்டு

கொரோனா புதிய வைரஸ் கிளம்பியது எங்கிருந்து... உலக சுகாதார நிறுவனம் கூறியது என்ன...

ஒமிக்ரான் வைரஸ் ஏன் வீரியமானது; மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்


No comments

Powered by Blogger.