இந்தியாவில் ஒமிக்ரான் அதிகரிப்பு; தமிழகத்துக்கு மத்திய குழு வருகை
புதுடெல்லி, டிச.,26-
இந்தியாவில் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 415 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழகம் உள்பட 10 மாநிலங்களுக்கு மத்திய குழு வர உள்ளது.
ஒமிக்ரான் அச்சம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இருப்பினும் ஒமிக்ரான் எனும் மரபணு மாறிய கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் பல மாநிலங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இந்தியா கொரோனா 3ம் அலையால் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.
இதை தடுக்கவே பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாநில அரசு கொரோனா தடுப்பு வழிமுறையை பின்பற்றுவதில் அலட்சியம் காட்டக்கூடாது. தேவைப்பட்டால் ஊரடங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு கூறியுள்ளது.
பாதிப்பு அதிகரிப்பு
இந்தியாவில் தற்போது 415 பேர் ஒமிக்ரான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மராட்டியத்தில் 108 பேர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர டெல்லியில் 79, குஜராத்தில் 43, தெலுங்கானாவில் 38, கேரளாவில் 37, தமிழகத்தில் 34, கர்நாடகாவில் 31 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
10 மாநிலங்களுக்கு மத்திய குழு வருகை
இதற்கிடையே கொரோனா பாதிப்பு அதிகரிப்பு, தடுப்பூசி செலுத்துவதில் சுணக்கம் உள்ள மாநிலங்களாக மராட்டியம், கேரளா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், மிசோராம், கர்நாடகா, பீகார், ஜார்கண்ட், பஞ்சாப் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களுக்கு மத்திய குழு வருகிறது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛‛இந்த 10 மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்துவோரின் சதவீதம் இந்தியாவின் சராசரியை விட குறைவாக உள்ளது. இதில் சில மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய குழு ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது. இக்குழு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகரிப்பது, , ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து 3 முதல் 5 நாட்கள் மாநில அரசுகளுக்கும், மாவட்ட நிர்வாகங்களுக்கு வழிக்காட்டும். மேலும் மாநிலங்களில் உள்ள மருத்துவமனை படுக்கைகள், ஆம்புலன்ஸ், வெண்டிலேட்டர், ஆக்சிஜன் வசதி குறித்தும் இக்குழு ஆய்வு மேற்கொள்ளும்’’ எனக்கூறப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்...
* ஒமிக்ரான் வைரஸால் இந்தியாவில் கொரோனா 3ம் அலை; சி.ஐ.எஸ்.ஆர்., புதுக்குண்டு
* கொரோனா புதிய வைரஸ் கிளம்பியது எங்கிருந்து... உலக சுகாதார நிறுவனம் கூறியது என்ன...
* ஒமிக்ரான் வைரஸ் ஏன் வீரியமானது; மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்
No comments