Header Ads

Header ADS

ஒரு சிக்ஸ் கூட அடிக்காத டெல்லி; மும்பையில் மோசமான சாதனை


மும்பை, ஏப்.16-

ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் ஒரு சிக்ஸ் கூட அடிக்க முடியாத அணி என்ற மோசமான பெயரை டெல்லி அணி பெற்றது.

டெல்லி-ராஜஸ்தான் மோதல்

ஐ.பி.எல்.லில் நேற்று டெல்லி, ராஜஸ்தான் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி அணி 8 விக்கெட்டுகள் இழந்து 147 ரன்கள் எடுத்தது. ரிஷாப் பண்ட் மட்டும் நிலைத்து நின்று ஆடி 32 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.

பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணியும் திணறியது. பட்லர் (2 ரன்). மனன்வோரா (9). கேப்டன் சஞ்சு சாம்சன் (4), சிவம்துபே (2), ரியான் பராக் (2) ஆகியோர் வந்த வேகத்தில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். நிலைத்து நின்று ஆடிய டேவிட்மில்லர் 43 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து அணிக்கு கைக்கொடுத்தார். இறுதிக்கட்டத்தில் கிர்ஸ் மோரிஸ் அதிரடியாக ஆட ராஜஸ்தான் அணி 19..4 ஓவர்கள்150 ரன்கள் எடுத்து வென்றது. இறுதிவரை ஆட்டமிழக்காத கிர்ஸ் மோரிஸ் 18 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 36 ரன்கள் குவித்தார்.

மோசமான சாதனை

இந்நிலையில் நேற்றைய போட்டியில் டெல்லி அணி வீரர்கள் ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை. இதன்மூலம் டெல்லி அணி மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது.

அதாவது ஐ.பி.எல். வரலாற்றில் மும்பை வான்கடே மைதானத்தில் ஒரு சிக்ஸ் கூட அடிக்காமல் இன்னிங்ஸ் முடித்த அணி எனும் பெயர் டெல்லிக்கு கிடைத்துள்ளது.

காரணம் என்ன

மும்பை வான்கடே மைதானம் பொதுவாக பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். நடப்பு ஐ.பி.எல். தொடரில் இந்த மைதானத்தில் நடந்த முதல் 2 போட்டிகளில் மொத்தம் 39 சிக்சர்கள் விளாசப்பட்டது. பஞ்சாப்-ராஜஸ்தான் இடையேயான போட்டியில் அனல் பறந்தது. இருஅணிகளும் 200 ரன்களுக்கு மேல் குவித்தன. பஞ்சாப் நிர்ணயித்த 222 ரன்னை விரட்டிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 217 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஆனால் நேற்றைய போட்டியில் மைதானத்தில் டிராக் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இதுதான் பேட்ஸ்மென்கள் ரன்குவிக்க முடியாமல் திணறியதற்கு காரணம் என கூறப்படுகிறது. 


No comments

Powered by Blogger.