Header Ads

Header ADS

இந்திய வீரர்களுக்கான ஊதிய பட்டியல் வெளியீடு; யாருக்கு எவ்வளவு; முழுவிபரம்

புதுடெல்லி, ஏப்.,16-

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. வழங்கும் ஆண்டு ஒப்பந்தத்தின் ஊதிய பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் நடராஜன் பெயர் இல்லாததால் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

4 பிரிவில் ஊதியம்

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பி.சி.சி.ஐ. ஆண்டுதோறும் ஊதியம் வழங்கி வருகிறது. வீரர்கள் விளையாடும் போட்டி, செயல்பாடு, அனுபவம் அடிப்படையில் 4 பிரிவாக பிரித்து ஊதியம் வழங்கப்படுகிறது.

ஆண்டுக்கு கிரேடு ‛ஏ+’ வீரர்களுக்கு ரூ.7 கோடியும், கிரேடு ‛ஏ’ வீரர்களுக்கு ரூ.5 கோடியும், கிரேடு ‛பி’ வீரர்களுக்கு ரூ.3 கோடியும், கிரேடு ‛சி’ வீரர்களுக்கு ரூ.1 கோடியும் ஊதியமாக கொடுக்கப்படும். இந்நிலையில் பி.சி.சி.ஐ.யின் இந்திய வீரர்கள் ஊதிய பட்டியல் வெளியாகியுள்ளது.

பாண்ட்யா முன்னேற்றம்

ஹர்திக் பாண்ட்யா
இதில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா கிரேடு ‛பி’யில் இருந்து கிரேடு ‛ஏ’க்கும், வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் கிரேடு ‛சி’யில் இருந்து கிரேடு ‛பி’க்கும் முன்னேறியுள்ளனர்.

காயத்தில் இருந்து திரும்பிய பவுலர் புவனேஸ்வர் குமார் கிரேடு ‛ஏ’யில் இருந்து கிரேடு ‛பி’க்கும், சுழற்பந்து வீச்சாளர்களான சகால், குல்தீப் யாதவ் ஆகியோர் கிரேடு ‛பி’யில் இருந்து கிரேடு ‛சி’க்கும் தள்ளப்பட்டுள்ளனர். 

நடராஜன்
சுப்மன் கில், முகமது சிராஜ் ஆகியோர் கிரேடு ‛சி’யில் இடம் பெற்றுள்ளனர். மேலும் மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ் ஆகியோர் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டுவெண்டி20 என 3 வித போட்டிகளிலும் களமிறங்கி கலக்கிய தமிழக ‛யார்க்கர்’ நாயகன் நடராஜன் பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

முழுபட்டியல்

கிரேடு ‛ஏ+’ பிரிவில் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோகித் ஷர்மா, வேகப்புயல் பும்ரா ஆகியோர் உள்ளனர். கிரேடு ‛ஏ’ பிரிவில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புஜாரா. அஜிங்கியா ரகானே, ஷிகர் தவான், கே.எல். ராகுல், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, ரிஷாப் பண்ட், ஹர்த்திக் பாண்ட்யா இடம் பெற்றுள்ளனர்.

கிரேடு ‛பி’ பிரிவில் விருத்திமான் சகா, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், ஷர்துல் தாகூர், மயாங்க் அகர்வால் இருக்கிறார்கள். கிரேடு ‛சி’ பிரிவில் குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, தீபக் சாகர், சுப்மன்கில், ஹனுமா விஹாரி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், சகால், முகமது சிராஜ் உள்ளனர். வீரர்களின் ஆண்டு சம்பள ஒப்பந்தம் 2021 செப்டம்பருடன் நிறைவடையும். அதன்பின் புதிய பட்டியல் வெளியிடப்படும்.

வீரர்களுக்கு இந்த சம்பளம் தவிர்த்து ஒவ்வொரு டெஸ்ட், ஒருநாள், டுவெண்டி20 போட்டிகளுக்கும் குறிப்பிட்ட சில லட்சம் ரூபாய் ஊதியமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.