அரசியலில் நுழைகிறாரா, இல்லையா; ரஜினியின் புதுஅறிக்கையில் இருப்பது என்ன
சென்னை, ஜூலை 12-
அரசியலில் ரஜினி
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நடிகர் ரஜினிகாந்த் புதிதாக கட்சி தொடங்கி களம் காண்பதாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் வெளியாகின. இதை ரஜினியும் உறுதி செய்தார். இதற்காக தனது ரசிகர்கள் அடங்கிய ரஜினி ரசிகர் நற்பணி மன்றத்தை, ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார். மேலும் மன்ற நிர்வாகிகளுடன் பலமுறை ஆலோசனை நடத்தினார்.
அத்துடன் தான் தொடங்க இருக்கும் கட்சியின் பெயர், சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் பணியையும் ரஜினி தீவிரமாக மேற்கொண்டார்.
கட்சி தொடங்கவில்லை
இருப்பினும் சட்டசபை தேர்தல் காலம் நெருங்கிய நிலையில் அரசியல் கட்சி தொடங்கவில்லை எனக்கூறினார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்தது.
இதையடுத்து அவரது பல ரசிகர்கள் மாற்று கட்சியில் இணைந்த நிலையில் வெறித்தனமான ரசிகர்கள், ரஜினியின் விருப்பமே எங்களின் விருப்பம் என கூறி தொடர்ந்து அவருடன் பயணித்து வருகிறார்கள்.
ஆலோசனை
இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள ராகவேந்திர திருமண மண்டபத்தில் ரஜினி தனது மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. அதன்பின் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எனக்கு கடமை உள்ளது
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன. நிலை என்ன என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது. அதை விளக்க வேண்டியது என்னுடைய கடமை.
நான் அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல பதவிகளையும் பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம்.
அரசியல் எண்ணம் இல்லை
கால சூழலாம் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு சார்பு அணிகள் எதுவுமின்றி இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக முன்புபோல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.
வாழ்க தமிழ் மக்கள்! வளர்க் தமிழ்நாடு!! ஜெய்ஹிந்த்!!!
இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதன்மூலம் ரஜினி தனது அரசியல் பயணத்துக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
🙄🙄😁
ReplyDelete