Header Ads

Header ADS

‛‛நானும் பிராமின் தான்’’; சுரேஷ் ரெய்னா பதிலால் சர்ச்சை

 


சென்னை, ஜூலை 22-

சென்னையின் கலாசாரம் பிடிப்பதற்கான காரணம் குறித்த கேள்விக்கு ‛‛நானும் பிராமின் தான்’’ என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியது சர்ச்சையாகி உள்ளது. இதுதொடர்பாக ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சுரேஷ் ரெய்னா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா. டோனியுடன் சேர்ந்து ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணிக்காக விளையாடி வருகிறார். சி.எஸ்.கே. கேப்டன் டோனியை ‛தல’ என அழைக்கும் ரசிகர்கள், ரெய்னாவை ‛சின்னதல’ என பாசத்தோடு அழைக்கின்றனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய டி.என்.பி.எல். தொடரின் தொடக்க போட்டியில் வர்ணணையாளர்களிடம் ரெய்னா வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாடினார்.

நானும் பிராமின் தான்

அப்போது, ‛வேஷ்டி உடுத்தி, நடனமாடி, விசில் அடித்து நடனமாடுகிறீர்களே.  சென்னை சென்னை கலாசாரத்துடன் ஒன்றிணைந்து போனதற்கான காரணம் என்ன’ என கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு ரெய்னா, ‛நானும் கூட பிராமின் தான். 2004ல் இருந்து சென்னையில் விளையாடி வருகிறேன். இங்குள்ள கலாசாரத்தை விரும்புகிறேன். சி.எஸ்.கே. அணி வீரர்களை எனக்கு பிடிக்கும். நான் அனிருத் ஸ்ரீகாந்த், பத்ரி (சுப்பிரமணியம் பத்ரிநாத்), பாலா பாய் (பாலாஜி) ஆகியோருடன் விளையாடி இருக்கிறேன். இங்குள்ள பல நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். சி.எஸ்.கே.,வுக்கு நல்ல நிர்வாகிகள் கிடைத்துள்ளனர். எங்களது உணர்வுகளை சுதந்திரமாக வெளிப்படுத்த உரிமை உள்ளது. சி.எஸ்.கே.யில் அங்கம் வகிப்பதை பாக்கியமாக கருதுகிறேன். இன்னும் அதிக போட்டிகளில் விளையாடுவேன் என நம்புகிறேன்’ என்றார்.

ஆதரவும் எதிர்ப்பும்

இவ்வாறாக சுரேஷ் ரெய்னா பேசிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலான நிலையில் சர்ச்சையாகியுள்ளது. ரெய்னாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கிரிக்கெட் ரசிகர்கள் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

ஆதரவாக கூறும் நபர்களில் பெரும்பாலானோர். ‛சுரேஷ் ரெய்னா எந்த ஜாதியையும் தரக்குறைவாக பேசவில்லை. அவர் தனது ஜாதியை தான் குறிப்பிட்டுள்ளார். இதில் தவறு இல்லை’ என்கின்றனர்.

ஆனால் எதிர்ப்பு தெரிவிப்போரோ, ‛சுரேஷ் ரெய்னா தனது ஜாதியை குறிப்பிடாமல் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இதை உங்களிடம் சற்றும் எதிர்பார்க்கவில்லை’ எனக்கூற சிலர் வழக்கம்போல் கடும் வார்த்தைகளால் விமர்சனம் செய்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.